×

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் உற்சாகமாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!: சீறிப்பாயும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளன. தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. இங்கு வேறு எங்கும் இல்லாத வகையில் தென்னலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதாவது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. வெற்றிபெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெருமை மட்டுமே சேர்கிறது. இதுவே இந்த கிராமத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியை இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 800 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளது. 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர். தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் கிராமமாக தென்னலூர் கிராமம் திகழ்கிறது.

தமிழகத்தில் புது காளைகள் எங்கு வாங்கினாலும் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்ட பின்னரே மற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து செல்வார்கள். காலை முதல் தற்போது வரை 100 மாடுகள் களம் கண்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்.பி. நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களும், வருவாய்த்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.


Tags : Pududukotta District Tennalore ,Jalikkadu Competition , Pudukottai, Tennalur, Jallikattu competition
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...